வீடு புகுந்து தாய் மற்றும் மகளை தாக்கி நகை பறித்த 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருவண்ணாமலை, ஜூன் 12: வீடு புகுந்து தாய் மற்றும் மகளை தாக்கி நகைகளை பறித்த வழக்கில், இரண்டு வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு அளித்தது.திருவண்ணாமலை அடுத்த டி.வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி செந்தாமரை(45). இவர், கடந்த 7.8.2017 அன்று இரவு மகள் அன்பரசி மற்றும் அவரது 5 மாத குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 2.30 மணியளவில், வீட்டுக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள், செந்தாமரையின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்கத் தாலியை அறுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து எழுந்த செந்தாமரை மற்றும் அன்பரசி ஆகியோர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். மேலும், இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து மர்ம நபர்களை பிடித்து வெறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, பெங்களூருவை சேர்ந்த அன்பு என்ற ஆல்பர்ட்(27), திருவண்ணாமலை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பாபு என்ற மன்சூர் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. வழக்கை நீதிபதி சங்கர் விசாரித்து அன்பு, பாபு ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ₹2,500 அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். தொடர்ந்து, இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: