வேலூர் உட்பட 5 மாவட்ட கருவூலங்களுக்கு பல கோடி மதிப்பிலான முத்திரைத்தாள்கள் நாசிக்கில் இருந்து வருகை மாவட்டந்தோறும் பிரித்து அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர், ஜூன் 11: வேலூர், சேலம், தர்மபுரி உட்பட 5 மாவட்டங்களுக்கு மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து வேலூர் கருவூலத்திற்கு பல கோடி மதிப்பிலான முத்திரைத்தாள் நேற்று வந்தது. இவை 5 மாவட்டங்களுக்கும் விரைவில் பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் நிலங்கள், வீடுகள், உட்பட அசையா சொத்துக்கள், ஒப்பந்தங்கள் உட்பட ஆவணங்கள் முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. இந்த முத்திரைத்தாள்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மத்திய அரசின் அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. இங்குதான் கரன்சி நோட்டுகளும் அச்சிடப்படுகிறது. இங்கு அச்சிடப்படும் முத்திரைத்தாள்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு தேவையான பலகோடி மதிப்பிலான முத்திரைத்தாள்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திற்கு நேற்று கன்டெய்னர் மூலமாக கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து கருவூலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு தேவையான பல கோடி மதிப்பிலான முத்திரைத்தாள்கள் மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து வேலூர் கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட கருவூலங்களில் இருந்து சார் கருவூலங்களுக்கு முத்திரைத்தாள்கள் வழங்கப்படுகிறது. அங்கிருந்து பத்திரப்பதிவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு கருவூலத்தில் இருந்தும் முத்திரைத்தாள்கள் வினியோகிக்கும்போது ஆன்லைனில் பதிவேற்றப்படுகிறது. அதனடிப்படையில் எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு முத்திரைத்தாள்கள் தேவை என்பதை அறிந்து பத்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: