9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது-அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 60வது ஆசிரியர் தின விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சிவகங்கை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒன்பது ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று, பதக்கம், அரசின் ரொக்கப்பணம் ரூ.10ஆயிரம் மற்றும் அமைச்சர் சொந்த நிதி ரூ.10ஆயிரம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:முன்பு மத்திய அரசால் மட்டுமே ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்ட நிலையில் 1997ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்திலும் ஆசிரியர்கள் பணியைப் பாராட்டி நல்லாசிரியர் விருது வழங்க உத்தரவிட்ட நிலையில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைகளை பராமரிப்பதைவிட ஒவ்வொரு பள்ளியிலும் மாணவச் செல்வங்களை தங்கள் குழந்தைகளுக்கு மேலாக பராமரித்து அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது என்பது பல்வேறு நடைமுறைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் உழைப்பிற்கும், கடமைக்கும் என்றும் அங்கீகாரம் உண்டு. உங்களால் முடிந்தளவு மாணவ, மாணவிகளின் கல்வி ஆற்றலை உயர்த்தி ஒவ்வொருவரையும் சிறந்த சாதனையாளராக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்டக்கல்வி அலுவலர்கள் அமுதா(சிவகங்கை), சண்முகநாதன்(தேவகோட்டை), சங்குமுத்தையா(திருப்பத்தூர்), முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது-அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: