மாவட்ட அளவில் நீட்தேர்வில் 78 பேர் தேர்ச்சி 2 பேர் மட்டுமே மெடிக்கலுக்கு தகுதி

ராமநாதபுரம், ஜூன் 7:  ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வை 681 பேர் எழுதிய நிலையில் 78 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவ படிப்பிற்கு 2 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இந்தாண்டிற்கான நீட்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல், சேலம், கோவை, கடலூர், தஞ்சை, திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, நாகர்கோவில் என 14 நகரங்களில் 188 மையங்களில நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த 5ம் தேதி  வெளியிடப்பட்டது. ராமநாதபுரத்தில் அரசு நீட் பயிற்சி மையம் மூலம் 681 மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 78 பேர் தேர்ச்சி பெற்றுள்ளளர். பரமக்குடியை சேர்ந்த மாணவர் சூரிய நாராயணன் 720க்கு 328 மதிப்பெண்களைப் பெற்று  மருத்துவக்கல்வி பெற தகுதி பெற்றுள்ளார். இவர் தமிழ் வழியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாணவி ஐஸ்வர்யா 280 மதிப்பெண்கள் பெற்று பல் மருத்துவத்தில் சேர தகுதி பெற்றுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவத் துறையில் சேருவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரத்தில் நீட்தேர்வு எழுதியவர்களில் 6 பேர் மட்டுமே 200 முதல் 300 மதிப்பெண்களுக்குள் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: