ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்

பள்ளிப்பட்டு ஜூன் 7: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகத்ரட்சகன் எம்.பி பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அம்மையார்குப்பம், வங்கனூர், ராஜநகரம், ராகவநாயுடுகுப்பம், அய்யனேரி, எஸ்.வி.ஜி.புரம், வீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்.

அப்போது பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் குடிநீர் பிரச்னை தங்களது பகுதிகளில் தலைவிரித்தாடுவதாகவும், இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும், குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு ஜெகத்ரட்சகன் எம்.பி எந்தெந்த பகுதிகளில் குடிநீர் பிரச்னை உள்ளது என்று கண்டறியப்பட்டு அதை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவேன் என்றும் உறுதி அளித்தார்.

அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, நிர்வாகிகள் கே.சத்தியராஜ், மா.இரகு, சீராளன், கே.எம்.சுப்பிரமணி, பா.சம்பத், சி.சுப்பிரமணி, சிலம்பு பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். திருத்தணி:  அதேபோல் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி நேற்று திருத்தணி நகராட்சியில் வாக்காளர்களுக்கு வீதி வீதியாக ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தார். அவருக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.சந்திரன், திருத்தணி நகர செயலாளர் எம்.பூபதி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அப்போது எம்.பி., ஜெகத்ரட்சகன், ‘‘திருத்தணி நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்ப்பேன். முதற்கட்டமாக வெயில் காலம் தொடரும் வரை என் சார்பில், மூன்று டிராக்டர்கள் மூலம் இலவச குடிநீர்  நகர் முழுவதும் வினியோகம் செய்யப்படும். திருத்தணி-சென்னை சென்டரல் இடையே  கூடுதல் மின்சார ரயில்கள் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதை தொடர்ந்து எம்.பி., ஜெகத்ரட்சகன் திருத்தணி ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

Related Stories: