அதிமுகவினரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் கலெக்டர் அறை முன் தர்ணா

மதுரை, ஜூன் 5: ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் அங்கன்வாடி ஊழியர் பணியிடத்துக்கு பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் கலெக்டர் அறை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 மதுரை கலெக்டராக இருந்த நாகராஜன், 1,573 பேர்களை தேர்வு  செய்து அங்கன்வாடி ஊழியர் பணி நியமன ஆணையை வழங்கச் செய்தார். பணி உத்தரவு பெற்ற அனைவரும் நேற்று பணியில் சேர்ந்தனர்.  இந்நிலையில், பணி உத்தரவு கிடைக்க பெறாதவர்கள் அதிமுகவினரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திரும்ப தரும்படி அதிமுகவினரிடம் கேட்டனர். அவர்கள் நாங்கள் பணத்தை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டோம். நீங்கள் வேண்டும்மென்றால், கலெக்டரிடம் கேளுங்கள் என கூறியுள்ளனர்.  

மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 20 பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை, அந்த பெண்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவற்றை நோட்டில் பதிவு செய்தார்.அப்போது சில பெண்கள் பணம் கொடுத்தாக கூறி புகார் கூறினர். அப்போது அங்கு வந்த சில அதிமுகவினர் கலெக்டர் அறை முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்த தூண்டினர். இதையடுத்து, பெண்கள் அனைவரும் கலெக்டர் அறை முன் உட்கார்ந்து எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினர். அங்கு வந்த போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அறையில் இருந்த கலெக்டர் நாகராஜன் இதுபற்றி கண்டுகொள்ளாமல், தனது மாறுதல் உத்தரவு வந்ததை தொடர்ந்து, தனது பொறுப்புகளை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் ஓப்படைத்துவிட்டு சென்றார். டிஆர்ஓ அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் வெளியேற்றினார். இதனால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்பாக இருந்தது.

Related Stories: