விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து உற்சாக வரவேற்பு

ராமேஸ்வரம், ஜூன் 4: ராமேஸ்வரம் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏராளமான சிறுவர்கள் நேற்று முதல் வகுப்பில் சேர்ந்தனர். நேற்று காலை ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த எண்.1 நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பில் 17 சிறுவர்களும் மற்ற வகுப்புகளில் 10 மாணவர்களும் முதல் நாளிலேயே புதிதாக சேர்ந்தனர்.

நேற்று காலை பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்த சிறுவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மலர் கொடுத்து டிரம்ஸ் இசை வாசித்து நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்து வரவேற்றனர். மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர் குமுதா, பள்ளி மேம்பாட்டுக்குழு தலைவி ஹமிதா, உறுப்பினர்கள் முருகன், களஞ்சியம், நாகராஜன், செந்தில், கிராமக்கல்விக்குழு தலைவர் பாலமுருகன் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல் பாம்பன் சின்னப்பாலம் நடுநிலைப்பள்ளியிலும் நேற்று நடைபெற்ற மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் முதல் வகுப்பில் சேர வந்த சிறுவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்ப்ட்டது. மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் 9 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர்கள் லியோன், ஞானசவுந்தரி உட்பட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தனுஷ்கோடி அரசுப் பள்ளியில் அரசு உத்தரவின் பேரில் எல்.கே.ஜி., யு.கே.ஜி மழலையர் வகுப்பு புதிதாக துவங்கப்பட்ட நிலையில் நேற்று பள்ளி திறந்த முதல் நாளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் மழலையர் வகுப்பில் 11 சிறுவர்களும், முதல் வகுப்பில் 15 சிறுவர்கள் புதிதாக சேர்ந்தனர். தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ஜெயசெல்வி தலைமையில் ஆசிரியர்கள் சசிக்குமார், ஷாமிலி மற்றும் சக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். நேற்று புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

Related Stories: