பள்ளிபாளையம் அருகே இரவில் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் பட்டறைகள்

பள்ளிபாளயைம், மே 30: பள்ளிபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரில் உள்ள சாயப்பட்டறைகள், இரவு நேரத்தில் கழிவுநீரை வெளியேற்றுவதால் ஏற்படும் குளோரின் நச்சுப்புகையால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக, தாலுகா அலுவலகத்தில் நேற்று புகார் தெரிவித்தனர். பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் அனுமதியற்ற சாயப்பட்டறைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல், நேரடியாக சாக்கடை கால்வாயில் கலக்கின்றனர். இதனால் காவிரியில் தண்ணீர் மாசடைகிறது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி வருகின்றனர். ஆனாலும், முழுமையாக சாயப்பட்டறைகளை அகற்ற முடியவில்லை. இந்நிலையில், பள்ளிபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து, அலுவலர்களிடம் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: பள்ளிபாளையம் அருகே ராமகிருஷ்ணா நகர், பெரியார் நகர், சுபாஷ் நகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கடந்த சில நாட்களாக  ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள்,  இரவு  நேரங்களில் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல், சாக்கடை வழியாக திறந்து விடுகின்றனர். இதனால் பெரியார் நகர், சுபாஷ் நகர்  பகுதிகளில் கழிவுநீர் குளோரின் புகையோடு செல்வதால், சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Stories: