திருப்புல்லாணியில் ஆமை வேகத்தில் நடக்கும் வேளாண்மை கட்டிட பணி

ராமநாதபுரம், மே 30:  திருப்புல்லாணியில் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் வேளாண்மை துறை அலுவலகங்களுக்காக புதிய கட்டிடம் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக முடிவடையாத நிலையில் உள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் 560 ஹெக்டர் நெல், 200 ஹெக்டர் தென்னை, 60 ஹெக்டர் சிறுதானியம், 30 ஹெக்டர் பயிறு வகைகள் விவசாயமும் நடைபெறுகிறது. சுமார் 24 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். தற்போது இயங்கி வரும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் 1963ம் ஆண்டு திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்திற்காக கட்டப்பட்டது. யூனியன் அலுவகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்ட நிலையில் சேதமடைந்த யூனியன் அலுவலகத்தை சீரமைத்து வேளாண் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

போதிய இடவசதியில்லாமல் நெருக்கடியில் உள்ள வேளாண்மை துறை அலுவலக  குடோன் சுவர்களின் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீரில் நனைந்து  உரங்கள், களைக்கொல்லி இடுபொருட்கள் வீணாகி வந்தது. மேலும் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலகங்கள் தனித்தனியாக செயல்பட்டதால்  விவசாயிகள் ஒவ்வொரு அலுவலகமாக அலைய வேண்டியிருந்தது. அனைத்து வேளாண்துறை சார்ந்த அலுவலகங்களும் திருப்புல்லாணி பகுதியில் அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 

நபார்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக்கட்டிடம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016 அக்., மாதம் பணிகள் துவக்கப்பட்டது. 2017 மே மாதம் பணிகள் நிறைவடையும் உத்தேச நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கீழ்தளத்தில் வேளாண் தோட்டக்கலை துறைக்கும், மேல்தளத்தில் வேளாண் பொறியியல், விற்பனை துறை, விதைசான்று அலுவலர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளாண்மை துறையில் வழங்கப்படும் மானிய உரங்கள், விதைகளை இருப்பு வைப்பதற்கும் 1,500 சதுர அடி குடோன் அமைக்கப்பட்டுள்ளது விவசாய காலங்களில் விதைகள், உரம், பூச்சி மருந்துகள் போன்றவைகளை வாங்கவும், காலத்திற்கேற்ற வகையில் பயிரிட வேண்டிய பயிர்கள், மண் ஆய்வு போன்ற விவசாயம் தொடர்பான பணிகளுக்கு திருப்புல்லாணி ஒருங்கிணைந்த விற்பனை கூடம் வசதியாக இருக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர்.

கடந்த இரண்டு  வருடங்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில்  பணிகள் முடிவடையாமல் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. விரைவாக திறந்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், பணிகள் முடிந்து விட்டதாகவும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தால் விரைவில் திறக்கப்பட உள்ளதாக  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: