விக்கிரமங்கலம் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

தா.பழூர், மே25 :  விக்கிரமங்கலம் அருகே சேதமடைந்த  சாலையை சீரமைக்க வேண்டும் மக்கள்  எதிர்பார்த்துள்ளனர். அரியலூர் மாவட்டம்  தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் அருகே உள்ளது அரசநிலையிட்டபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அரசநிலையிட்டபுரம் கிராமத்திற்கு க்கிரமங்கலத்திலிருந்து 2கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளது. இங்கு வசிக்கும்  குடும்பத்தினர் அத்தியாவசியமான  தேவை அனைத்துக்கும் தினந்தோறும் விக்கிரமங்கலம் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் புதிய சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 2017-2018ம் ஆண்டில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டு செலவில் புதிய சாலை அப்பகுதி மக்களுக்கு அமைத்து தரப்பட்டது.

கடந்த ஆண்டு முடிவில் பெய்த கனமழையால் இந்த ஊருக்கு செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து கோரமாக கிடக்கின்றது. இதனால் அந்த சாலையில் விவசாயத்திற்கு தேவையான மூலப்பொருட்களை  எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரும் பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயங்களுடன் சென்று வருகின்றனர். இந்த வழியாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும்  நாள்தோறும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்மற்றும் மாவட்ட நிர்வாகம் சாலையை உடனடியாக சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: