யானையை விரட்டிய போது பட்டாசு கையில் வெடித்ததால் விரல் சிதறி விவசாயி காயம்

சத்தியமங்கலம், மே 23:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்தில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அப் பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகின்றன.

இந் நிலையில், நேற்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை நால்ரோடு கிராமத்தில் உள்ள விவசாயி நாகராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் நாகராஜ், கிருஷ்ணசாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர்.
Advertising
Advertising

அப்போது விவசாயி கிருஷ்ணசாமி யானையை விரட்ட தனது கையில் இருந்த பட்டாசை பற்ற வைத்து வீச முயன்ற போது எதிர்பாராதவிதமாக பட்டாசு கையிலேயே வெடித்தது.

இதில், கிருஷ்ணாசாமியின் 5 விரல்களும் சேதமடைந்தது. மயங்கி விழுந்த அவரை விவசாயிகள் மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒற்றை யானை அண்ணா நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள விவசாயி சுப்பையன் என்பவரின் தோட்டத்தில் கிணற்று மேட்டில் உள்ள மின்மோட்டார் அறையை இடித்து சேதப்படுத்தியது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Related Stories: