தூத்துக்குடி செல்ல தடை நாகர்கோவிலில் சுப.உதயகுமார் உள்பட 2 பேர் கைது அதிகாலையில் வீட்டில் இருந்து அழைத்து சென்றனர்

நாகர்கோவில், மே23:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.  துப்பாக்கி சூடு சம்பவ தினத்தையொட்டி குமரி மாவட்டத்திலும் போராட்டங்கள் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியானதால் மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனரும், அணு உலை எதிர்ப்பாளருமான சுப.உதயகுமார், பங்கேற்பதாக இருந்தது.  இதற்காக நேற்று அதிகாலையில் அவர் தூத்துக்குடி செல்ல இருந்த நிலையில், நாகர்கோவில் இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டுக்கு கோட்டார் போலீசார் சென்றனர். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ள கூடாது என கூறிய போலீசார், சுப உதயகுமாரை வீட்டில் இருந்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது உதயகுமார் என்னை ஏன் கைது செய்கிறீர்கள் என கேட்டார். அப்போது போலீசார் உங்களை கைது செய்யவில்லை. காவல் நிலையத்துக்கு தான் அழைத்து செல்கிறோம் என்றனர். பின்னர் கோட்டார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரை நாற்காலியில் அமர வைத்தனர். இதே போல் இந்த கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் வீடு, ஆரல்வாய்மொழியில் உள்ளது. அவரையும் நேற்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.

 குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. கார்களில் செல்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய சுப உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார், நேற்று முன் தினம் மாலையில் கோட்டார் காவல் நிலையத்தில் இருந்து போன் வந்தது. உதயகுமார் தூத்துக்குடி செல்கிறாரா? என கேட்டனர். அதற்கு ஆமாம் என்று கூறினோம். இதையடுத்து மாலையிலேயே 2 போலீசார் எங்கள் வீட்டு முன் வந்து நின்றனர். பின்னர் அதிகாலையில் எனது கணவர் உதயகுமாரை தூத்துக்குடி செல்லக்கூடாது என கூறி கைது செய்து அழைத்து சென்றனர்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஆகும். அங்கு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் போலீசார் தடுப்பது நியாயம் அல்ல என்றார்.

Related Stories: