கழிப்பறையை மூடியதால் யானைக்கலில் சுகாதாரக்கேடு

ராமநாதபுரம், மே 23:  ராமநாதபுரம் நகராட்சி 2வது வார்டு யானைக்கல் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த கழிப்பறை மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி சார்பில் நகரில் 20க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் இலவச மற்றும் கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. பல தெருக்களில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் அப்படியே உள்ளது. இலவசமாக செயல்பட்டு வந்த கழிப்பறைகளை முறையான ஏலம் விடாமல் சில தனிநபர்களிடம் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நடத்திக் கொள்ள கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்ட கட்டண கழிப்பறைகள் திடீரென மூடப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள சில இடங்களில் உள்ள கழிப்பறை கட்டிடங்கள் எப்போது விழும் என சொல்ல முடியாத நிலையில் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. நகராட்சி பகுதியில் உள்ள கட்டண கழிப்பறைகள் ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்தகாரர் மூலம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது நகரில் 33 வார்டுகளில் நகராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் யானைக்கல் வீதியில் உள்ள கழிப்பறை மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அருகில் உள்ள காலி இடங்களையும், ஊரணி கரையை திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு காய்சல், சளி, தொற்றுநோய்கள் வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதிகாலை நேரத்தில் அப்பகுதி வழியாக வேலைக்கு செல்லும் கிராமத்து மக்களுக்கு இக்கழிப்பறை பயனுள்ளதாக இருந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் பகல் நேரத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சிப்ட் மாற்றுவது யானைக்கல் பகுதியில் உள்ளது. ராமநாதபுரத்தில் இயக்கப்படும் 50க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு கண்டக்டர், டிரைவர் பணி மாற்றம் செய்கின்றனர்.

பணிக்கு வரும் மற்றும் பணி முடித்து செல்லும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர், மக்கள் பயன்பாட்டிலிருந்த கழிப்பறையை மூடியதால் மக்கள் சிரமப்படுவதும், திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதனால் கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: