மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு இருளில் மூழ்கிய துறைமுகம் மூக்கையூர் மீனவர்கள் அவதி

சாயல்குடி, மே 23:  சாயல்குடி அருகே மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டு இரண்டே மாதங்கள் ஆன நிலையில் மின்கட்டணம் செலுத்தாததால், மின்வாரியம் மின் இணைப்பை துண்டித்தது. இதனால் இருளில் துறைமுகம் கிடப்பதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி அருகே மூக்கையூரில் மிக ஆளமான கடற்கரை உள்ளது. இப்பகுதியில் ஏர்வாடி முதல் ரோச்மா நகர் வரை 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2017ல் ரூ.170.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. முழுமையடையாமல் தற்போது வரை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதில் கடற்கரையிலிருந்து, கடல் மட்டத்தோடு சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பாறை கற்களை போட்டு பாதை அமைக்கப்பட்டு, படகுகள் நிறுத்தும் தளம், வலை பின்னுதல், உலர்த்துதல், மீன் ஏலக்கூடம், ஓய்வறை, உலர்களம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு  பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் குடிநீர் வசதி, போதிய ஆழமான பாதுகாப்பான படகு நிறுத்தும் இடங்கள், படகு பழுது பார்க்கும் இடம் உள்ளிட்ட 10 சதவீத பணிகள் நிறைவு பெற வில்லை. ஆனாலும் மார்ச் 4ம் தேதி தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். துறைமுகத்தில் பணிகள் முழுமையடையாமல், போதிய வசதிகள் இன்றி தவித்து வந்த நிலையில், தற்போது மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி தொகையை துறைமுகம் நிர்வாகம் கட்டாததால், மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் துறைமுகம் இருளில் மூழ்கி உள்ளதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் அவசர கோலத்தில் திறக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகிறோம். திறக்கப்பட்டு இரண்டு மாதங்களே ஆன நிலையில் உரிய மின் கட்டணத்தை செலுத்தாததால் சாயல்குடி மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் துறைமுகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. தற்போது மீன் இனப்பெருக்கத்திற்காக ஆள்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க தடை காலம் ஆகும். இதனால் துறைமுகத்தில் படகுகளை பழுது பார்த்தல், வலை பின்னுதல், சீரமைத்தால் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இப்பணி இரவு வரை நீடித்து வருகிறது.

மேலும் படகில் சென்று மீன்பிடிக்க முடியாது என்பதால் கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறோம். இதற்காக அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு செல்கிறோம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் துறைமுகம் இருட்டில் மூழ்கி கிடப்பதால் கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது. தொழிலுக்காக வாங்கிய கடனை கூட கட்ட முடியவில்லை.

மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் வெளி மற்றும் உள்மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் மாலை நேரத்தில் வருகின்றனர். இங்கு போதிய வெளிச்சம் இன்றி, இருள் சூழ்ந்திருப்பதால் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே இந்த துறைமுகத்தை மீனவர்கள் நலன் கருதி முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: