தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடந்தது

திருவண்ணாமலை, மே 23: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் இறந்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே நேற்று காலை அஞ்சலி கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் `ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது. நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வைத்து அஞ்சலி கூட்டம் நடத்திக்கொள்ளுங்கள்'''' என்றனர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்று, திருவண்ணாமலை தமிழ் மின்நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், சிஐடியு மாநில துணை தலைவர் ஆனந்தன், வக்கீல் அபிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: