பெண்ணின் திருமணத்தை நிறுத்திய மருந்து கடை முதலாளியை உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு

அந்தியூர், மே 22:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கருப்பணகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடசலமூர்த்தி(44). இவர் அத்தாணி மெயின்ரோட்டில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் நகலூர் குண்டுபுளியமரம் பகுதியை சேர்ந்த பெண் கடந்த மூன்று வருடங்களாக வேலை செய்து வந்தார். அந்த பெண்ணுக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வெங்கடச்சலமூர்த்தி அந்த பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளையின் செல்போன் எண்ணிற்கு, ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்’ என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

உடனே இந்த குறுஞ்செய்தியை பார்த்த அந்த மாப்பிள்ளை, அந்த பெண்ணின் உறவினர்களிடம் தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை மருந்துக்கடைக்கு சென்று வெங்கடசலமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.  

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார், அந்த பெண்ணின் உறவினர்களிடம் இருந்து வெங்கடசலமூர்த்தியை மீட்டு பவானி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்பு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள்  இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பெண்ணின் வீட்டார் புகார் எதுவும் வெங்கடசலமூர்த்தி மீது கொடுக்காததால், வெங்கடசலமூர்த்தி அந்த பெண்ணின் திருமணத்திற்காக செலவு செய்த தொகையை கொடுக்க வேண்டும். மேலும் அந்த பெண்ணின் வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: