தென்னூரில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டு 5 மாதமாக காட்சிப்பொருளான இ-வேஸ்ட் மையம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

திருச்சி, மே 22:  திருச்சி மாநகராட்சியில் குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள் வாரம் தோறும் வாங்கப்பட்டு வருகிறது.

அதே போல் புதன்கிழமைகளில் மட்டும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் வாங்கப்பட்டு உடனடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பைகளை ஒவ்வொரு வார்டிலும் நுண்உர செயலாக்க மையம் ஏற்படுத்தப்பட்டு இயற்கை உரமாக மாற்றி, விவசாயிகளுக்கும், மாடித்தோட்ட பயன்பாட்டிற்கு பொதுமக்களும், விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் வாங்கினாலும் மூன்றாவதாக இ-வேஸ்ட் என்று சொல்லக்கூடிய எலக்ட்ரானிக் வேஸ்ட் குப்பைகள் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் அதிகரித்து வருகிறது. வீடு, கடை, நிறுவனம் என எதை எடுத்தாலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இல்லாமல் இருக்காது. மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் என அனைத்தும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தான். இதில் செல்போன், லேப்டாப், ரேடியோ, பிளேயர் போன்றவை பழுதனால் அவைகளை வீட்டிலேயே வைத்து விடுகிறோம். இவற்றை வாங்குவதற்கு சரியான நபர்கள் இல்லாமல் இருப்பதே காரணமாக இருக்கிறது. இந்த நிலையை போக்க மாநகரில் மாநகராட்சி சார்பில் தென்னூர் முதல்முறையாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இ-வேஸ்ட் மையம் ஏற்படுத்தப்பட்டது.

  திருச்சி மாநகரை பொறுத்தவரை சுமார் 2.5 லட்சம் குடியிருப்புகள் உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் சராசரியாக சுமார் 5 கிலோ வரை இ-வேஸ்ட் இருக்கிறது. இவைகளை மக்களிடமிருந்து வாங்கி அதை அப்புறப்படுத்தவே இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக பெங்களூர் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டது. தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு, அதில் தொடர்பு கொண்டால் அதிகளவு இ-வேஸ்ட்களை வீட்டிலேயே வந்து அந்த நிறுவனம் எடுத்துக்கொண்டு அதற்கென ஒரு தொகையை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்குவார்கள். நேரிடையாகவும் வந்து கொடுக்கலாம். இதன் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மட்டுமின்றி இ-வேஸ்ட் இல்லாத நகரமாகவும் திருச்சி மாநகராட்சி மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த இ வேஸ்ட் மையம் ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி வட்டாரம் தெரிவித்திருந்தது. ஆனால் 5 மாதங்களை கடந்த நிலையில் இன்னும் இந்த இ-வேஸ்ட் மையம் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால் இ-வேஸ்ட் மையம் தற்போது பொதுமக்களுக்கு காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே இ-வேஸ்ட் மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: