மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு சிறப்பு முகாம் குடந்தையில் நடந்தது

கும்பகோணம், மே 22: மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஏவிசி கல்லூரியில் நாளை நடக்கிறது. திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள 100க்கும் மேற்பட்ட  அரசு ஊழியர்களுக்கான சிறப்பு முகாம், கும்பகோணத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ வீராச்சாமி தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஜெயபாரதி, இளங்கோ, தாசில்தார் நெடுஞ்செழின் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கான பொது பார்வையாளர் விஜயகுமார் பேசுகையில், வாக்கு எண்ணிக்கையின்போது தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதற்காக ஏராளமான அதிகாரிகள் அரசு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளிலேயே  வாக்கு எண்ணிக்கை தான் மிக முக்கியமானது. இதை நாம் கவனமாக செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து வருவது, சீல்களை கண்காணிப்பது என்ற பணிகளுக்கு ஒரு பிரிவை சார்ந்த அலுவலர்களும், வாக்கு எண்ணிக்கையில் ஒரு பிரிவை சேர்ந்த அலுவலர்களும் தனித்தனியாக அவரவர் வேலைகளை  செய்ய வேண்டும். இந்த இரு பிரிவையும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பார். வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும், பின்னர் அதன் பதிவுகள் முறைப்படி எந்த அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் திரையில் உள்ள விபரங்கள் அனைத்தையும் அனைவரும் பாரக்குமாறு நாம் பதிவு செய்ய வேண்டும். அந்த திரையில் தெரியும் விபரங்கள் சில விநாடிகள் தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்துக்குள் நாம் அந்த பதிவுகளை குறிப்பில் வைத்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது அங்கு உள்ளவர்கள் நம்மிடம் ஏதாவது விபரங்கள் கேட்பர்.

குறிப்பாக வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் அதிகளவு நம்மிடம் விபரம் கேட்பார்கள். அதை ஒவ்வொரு முறையும் தெளிவாக பதில் சொல்ல வேண்டும். அவர்கள் நம்மிடம் என்ன கேள்வி கேட்டாலும் நாம் பதற்றம் அடையக்கூடாது.

ஏனென்றால் நாம் பொறுப்பில் உள்ளோம். பிரச்னை எற்பட்டால் அதற்கான உயர் அலுவலர்களை அழைத்து கூற வேண்டும். அவர்கள் தேவையான பதில்களை அளிப்பார்கள் என்றார்.

Related Stories: