அனுமந்தராயன்கோட்டையில் முடங்கி போன திடக்கழிவு மேலாண்மை

செம்பட்டி, மே 22: அனுமந்தராயன்கோட்டையில் குப்பைகளை பிரிக்காமல் தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் மூச்சுத்திணறல் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், அனுமந்தராயன்கோட்டை ஊராட்சியில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கி வருகிறது. காரணம் தெருக்கள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை உரக்கிடங்கிற்கு எடுத்து சென்று மக்கும், மக்காத குப்பைகளாக பிரிக்காததுதான். மாறாக குப்பைகளை தெரு ஓரம் குவித்து மாலைநேரங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர்.  

இதுபோல தாமரைக்குளம் செல்லும் வழியில் மயானக்கரை ஓரம் குடகனாற்று பகுதியில் டன் கணக்கில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஊராட்சி நிர்வாகமே குவித்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் காற்றும் மாசடைகிறது. மேலும் மழைநீருடன் பிளாஸ்டிக் கழிவுகளால் குடகனாற்றில் கலந்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை உரக்கிடங்கிற்கு முறையாக எடுத்து சென்று பிரிப்பதுடன், குடகனாற்றில் குவிந்து கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும் என இப்பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: