அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நேரு நகரில் அடிப்படை வசதிகள் துளியும் இல்லை

அருப்புக்கோட்டை, மே 21: அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்டது நேரு நகர். இந்த பகுதியில் உள்ள அய்யனார், கணபதி, பாரதியார், காமராஜர் மற்றும் மெயின் வீதி உள்ளிட்ட தெருக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் ஒருபுறம் கட்டப்பட்ட வாறுகால் தரமற்று கட்டப்பட்டதால் சேதமடைந்துவிட்டது. வாறுகால்கள் முறையாக இல்லாததால் கழிவுநீர் வெளியேற வழியில்லை. இதன் அருகில் தான் குழந்தைகள் விளையாடுகின்றனர். இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் காய்ச்சல், இருமல் போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

கழிவுநீர் செல்ல வாறுகால்கள் கட்டித்தருமாறு பகுதி மக்கள் நகராட்சியில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் நோய்களுக்கு ஆளாகின்றனர். திருச்சுழி ரோடு பிரதான ஓடை தனிநபர் கட்டிடட ஆக்கிரமிப்பால் ஓடை மூடப்பட்டு கழிவுநீர் செல்ல முடியவில்லை. மேலும் காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் உள்ள ஓடையும் கட்டிடங்களின் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல முடியவில்லை. மழைகாலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் நேருநகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஓடையை மறைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களை அகற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வகையில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் இந்த பகுதியில் நகராட்சி மூலம் வழங்கக்கூடிய தாமிரபரணி மற்றும் வைகை குடிநீர் வருவதில்லை. விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காகத்தான் சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோட்டில் ஒரு கோடி ரூபாய் செலவில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து குடிநீர் வழங்குவதற்கு விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க பகிர்மான குழாய்கள் பதிக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். குடிநீருக்காக மாதம்தோறும் பணம் செலவழிக்கும் நிலையில் உள்ளது. இதனால் நகராட்சி குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு நகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.

அதேபோல் நேரு நகர் பகுதிக்கும் நகராட்சி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பலமுறை நகராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. அடிகுழாய் மினி பவர்பம்பு இருந்தும் அடிக்கடி பழுதால் தண்ணீர் வருவதில்லை. மினி பவர்பம்பு கூடுதலாக அமைக்கவேண்டும். இந்த பகுதியில் ஆண்கள் பெண்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 9.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது.  கட்டி முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

தெருக்களில் அமைக்கப்பட்ட ரோடு கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பேவர்பிளாக் கற்கள் பதித்து வருகின்றனர். நேரு நகர் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தராமல் நகராட்சி புறக்கணிப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நேரு நகர் பகுதிக்கு முறையான சாலை வசதி, வாறுகால் வசதி, குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: