வீடுகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ராமநாதபுரம், மே 21:  ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி, கவரங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இரவில் நடந்த இச்சம்பவத்தில் இருதரப்பிலும் 6 பேர் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், மருத்துவமனை வளாகத்திலும் மோதி கொண்டனர். இதனால் தனித்தனி வார்டுகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் இருதரப்பினர் மீதும் மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கவரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பாகுடி கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கியும், டூவிலரை தீவைத்தும் கொளுத்தியுள்ளனர். உடன் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து போலீஸ் பாதுகாப்பு அளித்தார்.

பிரச்னை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. கிராமத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்க வில்லை என நேற்று அரசு மருத்துவமனை முன்பாக பாப்பாகுடி கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த டிஎஸ்பி நடராஜன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மறியலை கைவிடப்பட்டது. ‘கிராமத்தினர் கூறுகையில், ‘முதல்நாள் அடிதடி ஏற்பட்ட போதே போலீசாரிடம் கிராமத்திற்கு பாதுகாப்பு கேட்டோம். உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் மீண்டும் வந்து அடித்திருக்க மாட்டார்கள். இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பொருள் சேதம் ஏற்பட்டிருக்காது’என்றனர்.

Related Stories: