ஆம்னி, டாக்ஸிதான் அதிகம் நிற்கின்றன கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட் தனியாருக்கு தாரை வார்ப்பா?

கொடைக்கானல், மே 21: கொடைக்கானல் பஸ்ஸ்டாண்டில் ஆம்னி பஸ்கள், கால் டாக்ஸிகள் அதிகளவில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. கட்டணத்தை வாங்கி நகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ்களை முறையாக நிறுத்த முடியாமலும், சீசன் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க முடியாத நிலையும் இருந்தது. காரணம் கொடைக்கானல் பஸ்நிலையம் மிக குறுகிய இடத்தில் இருந்ததுதான். இதனை விரிவாக்கம் செய்ய கோரி உள்ளூர்மக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலனை செய்து கடந்த திமுக ஆட்சியில் கொடைக்கானலி–்ல நவீன பஸ் நிலையம் அமைக்கப்பட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பஸ்நிலைய பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு மிகவும் தூய்மையாகவும், தனியார் வாகனங்கள் உள்ளே நுழையாமலும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்பட்டு வந்தது. இதனால் பஸ்நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது. ஆனால் தற்போது கொடைக்கானல் பஸ்நிலைய நிலையை தலைகீழாக மாறியுள்ளது. பஸ்நிலையம் முழுமையும் தனியார் ஆம்னி பஸ்கள், வாடகை வேன்கள், கால் டாக்ஸிகள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.

இதனால் பயணிகள் அரசு பஸ்களில் ஏறி, இறங்கி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். தவிர அரசு பஸ்களில் ஏறும் பயணிகளை மறித்து தனியார், ஆம்னி பஸ்களில் ஏற்றி செல்வதால் அரசுக்கு வருவாயும் பாதிக்கப்படுகிறது. இதனால் சிலசமயம் அரசு பஸ் ஓட்டுனர்களுக்கும், தனியார் பஸ் ஓட்டுனர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்படுவதோடு கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.மேலும் பஸ்நிலைய நுழைவுவாயில் பகுதியில் தனியார், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவதால் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகளை அழைத்து செல்ல முடியாமல் போகிறது. எனவே மாவட்ட கலெக்டர் தனியார் பஸ்நிலையமாக கொடைக்கானல் நகராட்சி பஸ்நிலையம் மாறி வருவதை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்மக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனுமதி கொடுத்தது யார்?

தமிழகத்தின் எந்த பஸ்நிலையங்களிலும் கால் டாக்ஸி, ஆம்னி பஸ்களை நிளுத்த அனுமதி இல்லை. ஆனால் கொடைக்கானலில் மட்டும் இவைகளை நிறுத்த அனுமதி கொடுத்தது யார்?. தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்க கட்டுப்பாடு நகராட்சி நிர்வாகமே ஆம்னி பஸ்களுக்கு ரூ.200 கட்டணம் வாங்கி கொண்டு உள்ளே அனுமதித்து வருகின்றனர், இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உடனே தீர்வு காண வேண்டும். அப்போதுதான் பயணிகள் நிம்மதியாக வந்து செல்ல முடியும்’ என்றனர்.

Related Stories: