திருச்சியில் வெயில் தாக்கம் அதிகரிப்பு வெப்ப நோயால் மக்கள் அவதி

திருச்சி, மே 21: திருச்சியில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், மக்கள் வெப்ப நோயால் அவதியடைந்து வருகின்றனர். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு கத்திரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திரம் முழுவதும் மழை பெய்ததால், அதிலிருந்து பொதுமக்கள் தப்பினர். ஆனால் இவ்வாண்டு அப்படியல்ல. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 109 டிகிரி வரை வெயிலின் கோரத்தாண்டவம் உள்ளது. மேலும், சாலை விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதால், வெயிலின் கொடுமை அதிகமாக உள்ளது.

காற்றில் ஈரப்பதமும் இல்லை. அனல் காற்றால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் 105 டிகிரிக்கும் குறையாமல் வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக தெருக்களில் உள்ள கடைக்காரர்கள் மதியம் 1 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்று விடுகின்றனர். மாலை 5 அல்லது 6 மணிக்கு தான் கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றனர். அந்தளவுக்கு வெயில் கொடுமை உள்ளது. மின்சாரம் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், இளநீர், பதநீர் போன்ற குளிர்ச்சியான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும், கேன் தண்ணீர் விற்பனையில் போலி நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன.

தண்ணீர் பஞ்சம் மற்றும் போலி கேன் தண்ணீரால் மக்கள் கிடைக்கும் நீரை பருக வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக உடல் உஷ்ண நோய், வயிற்றுப்புண் உள்ளிட்ட பல்ேவறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்தம் (பிபி) உள்ளவர்கள் வெயில் நேரத்தில் வெயிலுக்கு பயந்து வெளியில் வருவதற்கு அஞ்சி அலுவலகம், வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் குளுக்கோஸ் ஏற்றிக் கொள்வதற்காக நாள்தோறும் மருத்துவமனையில் சென்றவண்ணம் உள்ளனர். இவ்வாறு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்வோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே போலி கேன் வாட்டர்களை கண்டறிந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: