கொள்ளிடம் டோல்கேட் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடையின்றி வெட்ட வெளியில் பேருந்துக்கு காத்து நிற்கும் பயணிகள்

மண்ணச்சநல்லூர், மே 21: கொள்ளிடம் டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத காரணத்தால் பயணிகள் வெட்ட வெளியில், சுட்டெரிக்கும் வெயிலில் நின்று  தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை கடந்து சென்னை, சிதம்பரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் ஒருங்கிணைந்து இணையும் முக்கிய பகுதியாக உள்ளது கொள்ளிடம் டோல்கேட் உள்ளது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும் இங்கிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பல ஊர்களுக்கு செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருப்பார்கள். குறிப்பாக திருச்சி-சிதம்பரம் சாலையில் அரியலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் பிடிப்பதற்காக இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்து கிடப்பார்கள். பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், குழந்தைகள் வயதானவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் காத்திருப்பார்கள். காத்திருக்கும் பயணிகளுக்காக இந்த பஸ் நிறுத்த்த்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் தினம், தினம் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக கோடை காலங்களில் இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வேர்த்து விறுவிறுத்து அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் நிற்கும் பெண்களும் முதியவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே கொள்ளிடம் டோல்கேட் லால்குடி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து அவர்கள் அன்றாடம் படும் துயரை தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: