செங்கல்பட்டு அருகே பரபரப்பு அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீடுகள் இடிப்பு

செங்கல்பட்டு, மே 21: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி சத்தியா நகரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 10 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருக்கின்றன. இந்நிலையில் அந்த வீடுகளை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் மறைமலை ந்கர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேற்று வந்தனர். அவர்கள் வீடுகளை இடிக்க முயன்றனர். இதையறிந்த அந்தப் பகுதி கிராம மக்கள், திமுக ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், சிங்கப்பெருமாள் கோயில் திமுக ஊராட்சி செயலாளர் கே.பி.ராஜன் தலைமையில் சத்தியாநகர் பகுதி மக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த செங்கல்பட்டு தாசில்தார் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், லீமாரோஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் குடிசை மற்றும் மாடி வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். அரசு சார்பில் மின் இணைப்பு மற்றும் வீட்டு வரி ரசீது கட்டி குடும்ப அட்டையும் பெற்றுள்ளோம். தற்போது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் திடீரென வீட்டை இடிக்க வந்துள்ளனர். எங்களுக்கு மாற்று இடமும் வழங்கவில்லை. வீட்டை காலி செய்வதற்கு அவகாசமும் தரவில்லை என்றனர். மேலும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி 10 வீடுகளையும் வருவாய் துறையினர் இடித்து தரை மட்டமாக்கினர். அப்போது பெண்கள், குழந்தைகள் கதறி அழுதனர்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ஆட்சேபனை இல்லாத இடத்தில் நீண்டவருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி வருவாய் துறையினர் இடித்து தடைமட்டமாக்கிவிட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர், உடனடியாக மற்று இடம் வழங்க  வேண்டும் என்றனர். அதிகாரிகள் 30 செண்ட் அளவுள்ள ரூ 50 லட்சம் மதிப்புள்ள இடத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் காலை 10 மணி முதல் மாலை 1 மணிவரை பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: