சிறிய காயங்களுக்கு கூட மதுரைக்கு விரட்டும் அரசு டாக்டர்கள் பரமக்குடி மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார்

பரமக்குடி, மே 17: பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு விபத்தில் காயம்பட்டு வரும் நபர்களுக்கு அவசர சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக, முதலுதவி என்ற பெயரில் ஊசி மருந்து கொடுத்து. மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை என்ற பெயரில் பரிந்துரைக்கும் கொடுமை தொடர்கிறது.

பரமக்குடி அரசு மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்ட வெளிபுற நோயாளிகளும், 100க்கும் அதிகமான உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காலை 7 மணி முதல் 12 வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும். ஞாற்றுக் கிழமைகளில் காலை 7 மணி முதல் 12 வரை பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் வெளிபுற நோயாளிகளை சோதனை செய்து பார்த்து சிகிச்சை அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சிகிச்சை என்ற பெயரில் மருத்து மாத்திரை எழுதி கொடுத்து விட்டு நேரம் முடிந்த பின்னர் தங்களின் கிளினிக் சென்று விடுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மருத்துவமனை உள்ளதாலும், சுற்றுப்புறங்களில் அதிகமான கிராமங்களை கொண்டுள்ளதால், தினமும் விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் பொதுமக்கள் வருகின்றனர். சில நேரங்களில் பணியில் உள்ள டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மருத்துவம் பார்ப்பதற்கான உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் இல்லாமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சாதாரண விபத்துகளில் சிக்கி கால், கைகளில் காயம்பட்டு வரும் நபர்களுக்கு முதல் உதவி செய்து விட்டு, உடன் மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என எழுதி கொடுத்து விடும் பழக்கம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. சாதாரண காய்ச்சல் என்றாலும் மர்ம காய்ச்சல் அதனால், மதுரைக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து வருகின்றனர் என பொதுமக்கள் மருத்துவர்கள் மீது புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘பரமக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சில சிறு நோய்கள் வந்தாலும் கூட, மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்து விடுகின்றனர். ஆனால் சின்னசின்ன நோய்

களுக்கு சிகிச்சை கொடுக்காமல் மதுரை க்கு அனுப்புவதாக கூறி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டி வருவதால், அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.

ஆகவே பரமக்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, அனைத்து பிரிவுகளுக்கான சிகிச்சையையும் பரமக்குடியில் பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். டாக்டர் தரப்பில் கூறும்போது, ‘இங்கு வரும் நோயாளிகள் சிறு வயிற்றுவலி, நெஞ்சுவலி என்றாலே மதுரைக்கு பரிந்துரை செய்யுங்கள். அங்கேயே சிகிச்சை பெற்றுக்கொள்கிறோம் என கூறுவதால், வேறு வழியின்றி நாங்கள் மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது’’ என்றனர்.

Related Stories: