அரசு மருத்துவமனை மகப்பேறு, சிசு தீவிர சிகிச்சை பிரிவு அருகே கூடுதல் ஓய்வறையின்றி வெட்ட வெளியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் அவலம் இரவில் உறக்கமில்லாமல் தவிப்பு

திருச்சி, மே 17: திருச்சி அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எலும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு உள்பட 16 வார்டுகள் உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள்  தனித்தனியாக பயன்படுத்தி வந்தனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் ஒரே கட்டிடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் தீவிர மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவுக்கென கட்டிடம் கட்ட உலக வங்கி உதவியுடன் ரூ.6.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு 3 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கிய நிலையில் டிசம்பர் 30ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மிக பிரம்மாண்டமாக கட்டிய இந்த மருத்துவமனையில், பார்வையாளர்கள் தங்குவதற்கான அறை கட்டப்படாமல் இருந்ததால் நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதாக முதன்முதலில் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்துறை சார்பில் மருத்துவமனை அருகில் பார்வையாளர்களுக்கான ஓய்வு அறை கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனாலும் நாளுக்குநாள் மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுவதால் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் நோயாளிகளின் உறவினர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரித்தது. இதனால் அருகில் உள்ள ஓய்வு அறை நிரம்பி வழிவதால் மீதமுள்ள பார்வையாளர்கள் வெட்ட வெளியிலும், மருத்துவமனை வளாகத்திலும் மருத்துவமனையின் பக்கவாட்டிலும் இரவில் படுத்து தூக்கமின்றி தவிக்கின்றனர். எனவே கூடுதலாக மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவமனை அருகில் ஓய்வறை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: