உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவுக்கு: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு இல்லை... குமரியில் அரசு அலுவலர்கள் குழப்பம்

நாகர்கோவில், மே 17: உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவிற்காக குமரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படாமல் இருப்பது அரசு அலுவலர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவஸ்தலங்களில் முக்கியமானது உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில். கடற்கரையில் அமைந்த இக்கோயிலில், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் பக்தர்கள் நேர்ச்சையாக கடலில் இருந்து பிளாப் பெட்டிகளில் மணல் எடுத்து, அதனை தலையில் சுமந்து கரையில் சேர்ப்பர். இத்தகைய நேர்ச்சை தமிழகத்தில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இந்தாண்டு இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (17ம் தேதி) தொடங்குகிறது. நாளை 18ம் தேதி விசாக திருவிழா நடைபெறுகிறது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

அன்று  மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவிட்டிருந்தார். இந்த ஆண்டு நாளை (18ம் தேதி) சனிக்கிழமை வைகாசி விசாகம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை இதுவரை அறிவிக்கப்பட வில்ைல. உள்ளூர் விடுமுறை அளிக்கும் காலங்களில் சனிக்கிழமை அரசு விடுமுறையாக இருப்பினும் சனிக்கிழமையன்று இயங்கும் அரசு அலுவலகங்கள், அன்று பணிக்கு வரும் அரசு பணியாளர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் வழக்கம் உண்டு. ஆனால் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவிற்கு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படாதது அரசு அலுவலர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

குமரி மாவட்டத்தில் இருந்து உவரி, திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் விசாக திருவிழாவிற்காக செல்வதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை நாகர்கோவிலில் இருந்து இயக்குகிறது. அதன்படி உவரிக்கு 50 பஸ்களும், திருச்செந்தூருக்கு 20 பஸ்களும் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு செல்லும் பஸ்கள் வள்ளியூர், மன்னார்குளம், திசையன்விளை, இடையன்குடி வழியாக உவரிக்கு செல்லுகின்றன. திருச்செந்தூருக்கு செல்லும் பஸ்கள் வள்ளியூர், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு செல்கின்றன.

Related Stories: