கடலாடி-மீனங்குடி சாலையை தரமானதாக போடக்கோரி முற்றுகை

சாயல்குடி, மே 15: கடலாடியிலிருந்து மீனங்குடி செல்லும் புதிய சாலையை தரமானதாக போடக்கோரி, பொதுமக்கள், இளைஞர்கள் வாகனங்களை முற்றுகையிட்டனர். கடலாடியிலிருந்து மீனங்குடி வழியாக மேலச்செல்வனூர் செல்ல பிரதான சாலை உள்ளது. இச்சாலையை கருங்குளம், பூதங்குடி, பாப்பாகுளம், மீனங்குடி, பள்ளனேந்தல், சாத்தங்குடி வெள்ளாங்குளம், பாடுவனேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடலாடியிலிருந்து மீனங்குடி வரையிலான சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி முகமையின் சார்பில் பாரத பிரதமர் கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சாலை போட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, கடந்த மூன்று மாதமாக பணிகள் நடந்து வருகிறது. தற்போது முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து, இரண்டு தினங்களுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. தார்ச்சாலை அமைக்கும் பணி தரமானதாக இல்லை எனக்கூறி சாத்தங்குடி, வெள்ளாங்குளம், மீனங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாகனங்களை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், மீனங்குடி சாலை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக குண்டும், குழியுமாக இருந்து வந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த முறை சாலை முறையாக போடாததால் சாலை போடப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்து விட்டது. எனவே தற்போது போடப்படும் சாலையை முறையாக தரமானதாக போட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அது வரை சாலை பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனர்.

உதவி செயற்பொறியாளர் ஒருவர் கூறும்போது,  புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள முறைப்படி புதிய சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. உதவி பொறியாளர், சாலை ஆய்வாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் நடக்கிறது. தரமானதாக, முறையாக போடப்படுகிறது என்றார்.

Related Stories: