குமரி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில், மே 10 :  குமரியில் கடந்த 4 ஆண்டுகளாக தெருநாய்களை கட்டுப்படுத்த ஏபிசி (அனிமல் பெர்த் கன்ட்ரோல்) எனப்படும் விலங்குகள் இனப்பெருக்க அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. இதனால் நாகர்கோவில் மாநகராட்சியில் சுமார் 3500 என்ற கணக்கில் இருந்த தெருநாய்கள் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்துள்ளது. இதில் பல நாய்கள் வெறிநாய்களாக மாறுவதால், நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் தெருநாய்கள் பெருக்கம் அதிகமாக காணப்படுகிறது. கிராமப்புறங்களில் ஆண் நாய்கள் என்றால் அவற்றை வளர்க்க எடுத்து செல்கின்றனர். பெண் நாய்களை எடுத்து செல்வோர் குறைவு. இதிலும் பலர் நாய்களை வளர்த்து வெளியே விட்டு விடுகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் ஆண்டிற்கு இருமுறை குட்டிகளை ஈனுகின்றன. ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 7 குட்டிகளை ஈனுவதால், நாய்களின் எண்ணிக்கை தற்போது கணக்கில்லாமல் பெருகி உள்ளது.

இந்த நாய்கள் ரேபிஸ் நோய் கிருமிகளை உருவாக்கும் தன்மையுடைய வௌவால், எலி, பெருச்சாளி, பூனை போன்ற விலங்குகளுடன் சண்டையிடும்போது, நாய்க்கு ரேபிஸ் கிருமிகள் தொற்றி விடுகின்றன. இந்த கிருமிகள் மூளையை தாக்குகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு ஒரு சில நாட்கள் முதல் 3 மாதம் கழித்து கூட கிருமியின் தாக்கம் வெளிப்படும். இந்த நாய்கள் ஆடு, மாடு, கோழிகள் மட்டுமின்றி மனிதர்களையும் கடிப்பதால், கடிபட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களையும் ரேபிஸ் நோய் பாதிக்கிறது. இதனால் கடிபட்டவர்கள் 24 மணி நேரத்தில், டெட்டனஸ் ஊசி மற்றும் நாய் மற்றும் பூனை கடிக்கான தடுப்பூசியை போடுவது அவசியம்.

தவறும் பட்சத்தில் 3 மாதங்களுக்குள் நாய்கள் போல சத்தம் எழுப்பி, உணவருந்தாமல் மரணத்தை தழுவும் சூழல் ஏற்படலாம். தற்போது மாவட்டம் முழுவதும் இது போன்ற தெருநாய் மற்றும் வெறிநாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சி மட்டுமின்றி அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, தாழக்குடி பேரூராட்சி, நுள்ளிவிளை ஊராட்சி பண்டாரவிளை பகுதிகளில் கடந்த இரு நாட்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சீதப்பாலில் ஒரே இரவில் 13 பேர் மற்றும் கோழிகள், ஆட்டினை  கடித்த நாய் தற்போது இறந்து விட்டது. எனினும் அந்த நாயுடன் சுற்றிய அப்பகுதியில் உள்ள நாய்களுக்கும் ரேபிசின் தாக்கம் இருக்கும் என்பதால் அவற்றையும் பிடித்து ரேபிஸ் சோதனை செய்து, ஊசி போடவும், நாய்களுக்கான கருத்தடை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்ததை அடுத்து, தாழக்குடி பேரூராட்சி, இந்திய விலங்குகள் நல ஆணையம் மற்றும் ஜீவகாருண்யா அமைப்பு சார்பில் அதன் இயக்குநர் ஷோபா தலைமையில் கடந்த 3 நாட்களாக நாய்களை பிடித்து பூதப்பாண்டியில் உள்ள கால்நடை இனப்பெருக்க அறுவை சிகிச்சை கூடத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நுள்ளிவிளை ஊராட்சி பண்டாரவிளையில் சாலையில் ஏராளமான நாய்கள் படுத்து கிடக்கின்றன. அவை சாலையில் நடந்து செல்பவர்கள், பைக்குகளில் செல்பவர்களை விடாமல் துரத்தி கடிக்கின்றன. இதனால் சாலையில் செல்லவே அச்சப்படும் சூழல்  உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Related Stories: