பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

பொன்னமராவதி,மே 9: பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், பொன்னமராவதி வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி வீடுவீடாக பள்ளிசெல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா  வழிகாட்டுதலின்படி தொடங்கியது. இப்பணி வரும் 15ம்தேதி வரை நடைபெறுகிறது.

இதில் மாற்றுத்திறன் குழந்தைகளில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், பள்ளிசெல்லா குழந்தைகளில் 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் விபரங்கள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் தொடர்ந்து ஒரு மாதமாக பள்ளிக்கு வராத குழந்தைகள் இக்கணக்கெடுப்பில் கண்டறியப்பட உள்ளனர். இக்கணக்கெடுப்பில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயங்கள் நடைபெறும் இடங்களிலும் மற்றும் வீடுவாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ காய்கறி அங்காடிகள் ஆகிய பகுதிகளில் சிறப்பு கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது.

Related Stories: