வேதாரண்யம் பகுதியில் கடல் காற்றோடு உப்பு மண் கலந்து வீசுவதால் விவசாயம் கடும் பாதிப்பு விவசாயிகள் வேதனை

வேதாரண்யம், மே 8: வேதாரண்யம்  பகுதியிலிருந்து வீசும் காற்றுடன் உப்பு மண் துகள்கள் கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வேதாரண்யம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்கள் தொடங்கி கோடைகாலம் நிறைவடையும் வரையில் தெற்கு திசையில் இருந்து வேகமான கடற்காற்று வீசுவது வழக்கம்.  அப்போது  கடல் நீர்மட்டம் உயா;ந்து பள்ளமான பகுதிக்குள் கடல் நீர்; உட்புகும். இந்நிலையில் பாணி புயல் எச்சரிக்கைக்கு பிறகு கடந்த சில நாட்களாக வழக்கத்தை விடவும் வேகமாக கடல் காற்று வீசி வருகிறது. தெற்கு திசையில்  இருந்து வீசும்  காற்றால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. காற்றில் அடித்து வரப்படும் புழுதி மண் சாலையில் வாகனங்களில் செல்வோர் நடந்து செல்வோர் கண்களில்பட்டு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

இந்த காற்றின்  காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து அப்பகுதியின் தாழ்வான பரப்பில் உப்புநீர் உட்புகுந்து வடிகிறது. தெற்கு கடலோரப் பகுதியான கடிநெல்வயல், பஞ்சநதிக்குளம், நடுசேத்தி, தென்னடார், ஆய்ககாரன்புலம் -4, வாய்மேடு, பன்னாள் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் உப்பளத்தில் இருந்து வேகமாக வீசும் காற்றில் உப்பு மண் துகள்கள் கலந்து வருவது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள், சணப்பை,  பயறுவகை செடிகளிலும், மரங்களிலும் உப்பமண் படிந்து செடிகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.  வழக்கமான ஆண்டுகளில் காற்றுவீசும் பருவம் தொடங்கிய ஒருசில நாட்களில் கடல்நீர் பள்ளமான பகுதியில் நிரம்பிவிடும் என்பதால் அங்கிருந்து மண்துகள்கள் வெளியேறுவது தடுக்கப்படும். ஆனால் கஜா புயலின்போது கடலில் இருந்து வெளியேறி உப்பள பரப்புக்குள் படிந்துள்ள கடல் களிமண் வெயிலின் காரணமாக உலர்ந்து பொடியாகி காற்றுடன் கலந்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.  மேலும் கடலோரங்களில் இயற்கை தடுப்பு அரணாக திகழ்ந்த கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாலும், நிகழாண்டில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே உப்பு மண் பாதிப்பை தடுக்க கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் மாற்று மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: