தரமற்றதாக அமைக்கப்பட்டதால் பாதாள சாக்கடை திட்ட குழாயில் உடைப்பு

ராமநாதபுரம், ஏப்.25: ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் காட்டூரணி செல்லும் சாலையில் நகராட்சி எல்லையிலிருந்து சாலை குடியிருப்பு வரை பிரதம மந்திரி கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 4 கி.மீ. தூரத்திற்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் மூலமாக ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணிகள் துவங்கப்பட்டு ஒராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

நான்கு கி.மீ தூரம் போடப்படும் புதிய தார்சாலை ரம்லான் நகர், இளமனூர், மாடக்கொட்டான், காட்டுரணி உள்ளிட்ட கிராமங்களின் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த கிராமங்களிலிருந்து பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன்படுத்து கூடிய வகையில் உள்ளது. சாலைகளுக்கு இடையே 6 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக நடைபெற்ற நிலையில் ஜல்லி கற்கள் பதித்து கிராவல் பரப்பும் வரை வேலைகள் நிறைவடைந்து தார்பரப்பும் வேலை மட்டும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சியில் சுமார் 11 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நகர்புறத்தில் நான்கு தொட்டிகளில் கழிவுநீர் ஏற்றப்பட்டு வெளிப்பட்டிணம் இந்திரா நகர் தொட்டியில் நிரப்பப்படுகிறது. தினமும் சுமார் 58 லட்சம் லிட்டர் கழிவுநீர் சேருகிறது. இந்திரா நகர் கழிவுநீர் தொட்டியிலிருந்து இச்சாலை வழியாக புல்லங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு, பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் மூலம் செல்கிறது. பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டன. பழுதடைந்த நிலையில் உள்ள இக்குழாய்கள் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது.

ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் குழாய் உடைப்பின் போது ரோட்டை உடைத்து தோண்டி பணிகள் செய்வதை பொதுமக்கள் பெரிதாக கருதவில்லை. தற்போது புதிய சாலை போட்ட பின்னர் குழாய் உடைந்தால் சாலை சேதமடைந்து வீணாகி விடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ரூ.2 கோடி மதிப்பீட்டில் போடப்படும் புதிய தார்சாலை கீழே பதிக்கப்பட்டிருக்கும் குழாய் உடைப்பு ஏற்படும் போது மீண்டும் ரோட்டை தோண்டி உடைப்பை சரி செய்ய வேண்டும். அடிக்கடி உடைப்பு ஏற்படும் நிலையில் சாலை போட்ட சில மாதங்களிலேயே மோசமானதாகி விடும நிலை உள்ளது.

அப்பகுதியினர் கூறுகையில், ‘பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் போட்ட குழாய்களை மாற்ற வில்லை. தரமற்ற குழாய்களை பதித்துள்ளதால் போட்ட நாள் முதல் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. குழாயை மாற்றாமல் சாலை போட்டுள்ளதால் உடைப்பு ஏற்பட்டு சாலை வீணாகி விடும். கடந்த ஓராண்டாக சாலை பணிகள் நடைபெறும் போதே அதிகமான இடங்களில உடைப்பு ஏற்பட்டு இப்பகுதியில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் உடைப்பை நகராட்சி அதிகாரிகள் உடன் சரி செய்யாத நிலையில் கழிவுநீர் அருகில் தாழ்வான பகுதியாக உள்ள ஊரணிக்குள் சென்றது. உடைப்பை சரி செய்யும் போது வெளியேற்றப்படும் கழிவுநீரை இப்பகுதியில் உள்ள வயல் வெளியில் திறந்து விடுகின்றனர். இதனால் அருகில் உள்ள வீடுகளிலும் மக்கள் வசிக்க முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. சாலை அமைக்கும் முன்பே தரமான புதிய பெரிய அளவிலான குழாய்கள் பதித்து சாலைப் பணிகள் செய்திருந்தால் கூடுதலான நாட்கள் தார்சாலை நிலைத்திருக்கும். சாலை அமைக்கும் காண்டிராக்டர்கள் 5 ஆண்டுகள் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.

இதுபோன்ற உடைப்புகளை காண்டிராக்டர் செய்வாரா அல்லது நகராட்சி நிர்வாகம் செய்யுமா என தெரிவில்லை. மத்திய அரசின் மூலமாக கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கி போட்டப்பட்ட சாலை வீணாகும் நிலை உள்ளது. இச்சாலை தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் கழிவுநீர் குழாய் உடைப்பை கவனத்தில் கொள்ளாதது ஏன் என தெரியவில்லை என்கின்றனர்.

Related Stories: