பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கோரைகள் மண்டி ஓடையாக மாறி வரும் வெட்டாறு 1.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம்

கும்பகோணம், ஏப். 26: தஞ்சை வெட்டாற்றை பல ஆண்டுகளாக தூர்வாராததால் கோரைகள் மண்டி ஓடையாகி வருகிறது. இதனால் 3 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1.10 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் அழியும் நிலையில் உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெட்டாறு, தென்பெரம்பூர் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் வடவாறும், வெட்டாறும் பிரிகிறது. இந்த வெட்டாறு அங்கிருந்து அரசூர், நெடார், திருக்கருகாவூர், திருவாரூர் மாவட்டத்தில் ஊத்துக்காடு, சேரிபாலம், அணைக்கட்டு, கொரடாச்சேரி பாலம் வரை சென்று எண்கண் ஷெட்டரில் ஓடம்போக்கி ஆறு தனியாக பிரிந்து விடுகிறது. பின்னர் வெட்டாறு நாகூர் பகுதியில் கடலிலும், ஓடம்போக்கி ஆறு சிக்கல் வழியாக உப்பனாறாக மாறி கடுவையாற்றில் கலந்து நாகை துறைமுகம் பகுதியில் கடலில் கலக்கிறது.இந்த வெட்டாற்றால் தஞ்சை மாவட்டத்தில் 50 கிராமங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 200 கிராமங்கள், நாகப்பட்டினத்தில் 500 கிராமங்களிலும் 1.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் (ஆயக்கட்டு) சாகுபடி இருந்து வருகிறது. இந்நிலையில் வெட்டாறு தலைப்பிலிருந்து கோரைகள் மண்டியும், காட்டாமணக்கு செடிகள் மண்டியும் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் மேற்கே செல்லும் தண்ணீர் திரும்பி கிழக்கே ஓடுகிறது. திருக்கரூகாவூர், நெடார் கீழ்பகுதி, ஊத்துகாடு, வையசச்சேரி பகுதியில் உள்ள ஆறு முழுவதும் கோரைகள் மண்டியுள்ளது.

இதேபோல் தலைப்பிலிருந்து முக்கால்வாசி பகுதி கோரைகளாக மண்டியிருப்பதால் தண்ணீர் வந்தாலும் விவசாயத்துக்கு பயன்படாமல் அருகில் உள்ள வாய்க்கால், ஓடைகளில் புகுந்தும், தேவையில்லாத இடத்திலும் பாய்ந்து விடும். இதனால் திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே வெட்டாற்றில் உள்ள கோரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் விவசாயத்துக்கு பயன்பெறும் வகையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வெட்டாற்றின் கரையில் விவசாயம் செய்து வரும் பஞ்சாபிகேசன் கூறுகையில்,வெட்டாற்றில் தூர்வாரி 7 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனால் ஆறு முழுவதும் தூர்ந்து ஓடையாகிவிட்டது. மேலும் வெட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாலும், மணல்கள் இல்லாமல் மண் திட்டுகளாகி விட்டது. அதிலும் செடிகள், கோரைகள், நானல்கள் முளைத்து விடுகிறது. வெட்டாற்றால் 3 மாவட்டங்களிலும் 1.10 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் முறையாக செல்ல வழியில்லாததால் கரைகளின் பக்கங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள், குட்டைகளில் தண்ணீர் சென்றுவிடும். பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் வெட்டாற்றால் பயன்பெறும் கிராமங்களில் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெட்டாற்றில் தண்ணீர் முறையாக மூன்று மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டுமானால் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து அரசு துறையை சேர்ந்தவர்களும் சேர்ந்து ஆற்றில் மணல் எடுப்பதை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இனி வருங்காலத்தில் தண்ணீர் இல்லாமல் அனைத்து விவசாயமும் பாழாகும். ஆறுகளில் உள்ள கோரைகள், நானல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டும்ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அலுவலர் கூறுகையில், ஆற்றில் மணல் அதிகளவில் அள்ளுவதால் தான் செடிகள், கோரைகள் மண்டுகின்றன. ஒருமுறை கோரை முளைத்து விட்டால் அதை அழிப்பது மிகவும் கடினம். எவ்வளவு தான் தூர்வாரினாலும், சிறிய அளவில் விதைகள் இருந்தாலும் முளைத்து விடும். தமிழக அரசு மூன்றாண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. அதை மாற்றி ஆண்டுதோறும் தூர்வாருவதற்கு உத்தரவிட வேண்டும். ஒருமுறை தூர்வாரி விட்டு மறு வருடம் பார்த்தால் திரும்பவும் கோரைகள் முளைத்துவிடும். இதுபோன்ற நிலைக்கு ஒரே தீர்வு ஒரு நேரத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஆறு, வாய்க்கால்களை தலைப்பிலிருந்து முடிவு வரை தூர்வார வேண்டும். இல்லையென்றால் எத்தனை முறை தூர்வாரினாலும் பயனில்லை என்றார்.

Related Stories: