மணப்பாறை அருகே புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கும் பொது சுகாதார வளாகம் மக்கள் அவதி

மணப்பாறை, ஏப்.26:  மணப்பாறை அருகே புதிதாக கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் கடந்த 2 ஆண்டாக  பயன்பாட்டிற்கு விடப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மணப்பாறை நகராட்சி 1வது வார்டு விடத்தலாம்பட்டியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டாக பயன்படாமல் பூட்டி கிடக்கிறது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. நகரின் முதன்மையான வார்டில் கழிவறையின்றி பொதுவெளியில் காலைக்கடன்களை கழிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, பயன்பாடின்றி கிடக்கும் பொது சுகாதார கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: