தொளசம்பட்டியில் சாக்கடை அமைக்கும் பணிக்காக தனியார் கட்டிடங்கள் சேதம்

ஓமலூர், ஏப்.26: ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், தொளசம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக, மேட்டூர் சாலை ஐந்தாவது மைல் பகுதியில் இருந்து தாரமங்கலம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான சாக்கடை வசதி இல்லை. மேலும், சாலை குறுகலாக இருந்ததால், போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, சாக்கடை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் ேபரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே, ஒரு சில இடங்களில், தனியாருக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, பள்ளம் தோண்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் கேட்பவர்களை, நெடுஞ்சாலை உதவி பொறியாளர் மிரட்டுவதாக கூறப்படுகிறது. பழைய முட்டுக்கல்லை விட்டு, தனியார் நிலத்தை சேர்த்து புதிய முட்டுக்கல் நட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நெடுஞ்சாலையை ஒட்டியே சாக்கடை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘முறையாக அளவீடு செய்து, சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. யாருக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை,’ என்றனர்.

Related Stories: