ஆடுதுறை வீரசோழன் ஆற்றில் கிடப்பில் கிடக்கும் புதிய பாலம் கட்டும் பணி விரைந்து துவங்க மக்கள் வலியுறுத்தல்

கும்பகோணம், ஏப். 25: கும்பகோணம் அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி கிடப்பில் கிடக்கிறது. பழைய சேதமடைந்த பாலத்தில் கனகர வாகனங்கள் சென்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து துவங்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையில் வீரசோழன் ஆற்றுப்பாலம் உள்ளது.

இப்பாலத்தின் வழியாக நவக்கிரக கோயில்களான சூரியனார்கோயில், கஞ்சனூர் சுக்கிரன் கோயில்களும், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம், புகழ்பெற்ற பூம்புகார், சிதம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும். மேலும் தரங்கம்பாடி, காரைக்கால், திருப்பனந்தாள், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய 5 சாலைகள் சந்திக்கும் பகுதியாக ஆடுதுறை வீரசோழன் பாலத்தின் அருகில் அமைந்துள்ளது.

இதனால் இப்பகுதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. மேலும் காரைக்காலில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு நிலக்கரிகளை ஏற்றி கொண்டு 100க்கும் மேற்பட்ட கனரக லாரிகளும், பூம்புகார் பகுதியிலிருந்து கேரளா மாநிலத்துக்கு மீன் ஏற்றி கொண்டு லாரிகளும் சென்று வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தில் சில மாதங்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது. அப்போதே அதிக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பிரதான வீரசோழன் ஆற்று பாலத்தை அகலப்படுத்தி புதிய பாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பாலத்தின் கீழ்பகுதியில் ஏற்பட்ட விரிசல் பகுதி சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ், லாரி, கார்கள் போக்குவரத்து நடந்து வருகிறது. கனரக வாகனம் செல்ல மட்டும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை கண்காணிக்க போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் பாலத்தில் கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்று வருகிறது.

கும்பகோணம், சிதம்பரம் செல்வதற்கு இந்த பாலம் பிரதானமான இருப்பதால் புதிய பாலம் கட்டுவதற்காக ரூ.2.70 கோடி மதிப்பில் 36 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. புதிய பாலம் கட்டுவதற்காக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மார்ச் 5ம் தேதி புதிய பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. ஆனால் அதன்பிறகு புதிய பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் அச்சத்துடன் பழைய பாலத்தின் சென்று வருகின்றனர். எனவே ஆடுதுறை வீரசோழன் ஆற்றில் புதிய பால பணியை விரைந்து துவங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஷாஜகான் கூறுகையில், ஆடுதுறை வீரசோழன் ஆற்று பாலத்தில் விரிசல் விட்டும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கனரக வாகனங்கள் சென்று வருகிறது. எதிர்பாராதவிதமாக கனரக வாகனங்கள் செல்லும்போது பாலம் உள்வாங்கினால் உயிர்சேதம் ஏற்படும். புதிய பாலம் கட்டுமான பணியை துவங்கினால் இந்த சாலைக்கு பதில் கல்லணை, பூம்புகார் சாலையில் வாகனங்களை திருப்பி விட்டும், புதிய பாலம் கட்டும் இடத்தின் அருகில் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தரைபாலத்தை அமைக்கலாம் என்றார்.

Related Stories: