காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு

தஞ்சை, ஏப்.25: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் சாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.  ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  விவசாய சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்க மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் ஏலம் விட்டது.  நாடு முழுவதும் 55 இடங்களுக்கு ஏலம் விடப்பட்டதில் தமிழகத்திலுள்ள 3 இடங்களில் இரு இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.  தமிழகத்தில் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியதையடுத்து கடல் பகுதியில் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது.  என்றும் இதனால் பாதிப்பு இருக்காது என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அப்போது கூறியிருந்தார்.   அந்த விவகாரம் ஓரளவு ஓய்ந்திருந்த நிலையில் ஆந்திரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள  திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கி.மீ அளவில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  

மத்திய அரசின் இந்த அறிவிப்பானது. திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிற்கும் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் மேலும் வேதனையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.  வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள இரு உரிமங்களின்படி 247 இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காவது உரிமத்தின் படி 471.19 சதுர கி.மீ. பரப்பளவிலும் விரைவில் வழங்கப்படவுள்ள இரு உரிமங்களின் படி 1863.24 சதுர கி.மீ. பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  வேதாந்த குழுமத்துக்கு தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை விவசாய சங்கம்  வன்மையாகக் கண்டிக்கிறது.  

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிடெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குறுதி அரசியல் கட்சிகள்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று  அறிவித்திருந்தன.  ஆனால் தேர்தலுக்கு பிறகு திட்டத்தை செயல்படுத்துவது மக்களை மேலும் வஞ்சிக்கும் செயலாக உள்ளது. காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும், பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தையும் உடனே ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்தத் திட்ட ஒப்பந்தத்தை  ரத்து செய்யவில்லை என்றால் விவசாய சங்கம்  சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: