ஆத்தூரில் தவணை முறையில் புதிய குடிநீர் இணைப்பு பெறும் வசதி அறிமுகம்

ஆத்தூர், ஏப்.25:  ஆத்தூர் நகராட்சியில், இதுவரை வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை பெறாதவர்கள், குடிநீர் இணைப்பை பெறுவதற்கு டெபாசிட் தொகையை தவணை முறையில் செலுத்தும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் அறிமும் செய்துள்ளது. ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும், மேட்டூர்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சியில் பெரும்பாலான பொதுமக்கள், தங்களின் வீடுகளுக்கு முறையாக குடிநீர் இணைப்பு பெறாமல் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நகராட்சி மூலம் குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை தவணை முறையில் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில், சுமார் 6 ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இதுவரை குடிநீர் இணைப்பு பெறாத பொதுமக்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குடிநீர் கட்டணம் ஒரே சீராக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய முறையில், குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்துவதால், பொதுமக்கள் தங்கள் பயன்படுத்தும் குடிநீரை கணக்கிட்டு, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்த முடியும்,’ என்றனர்.

Related Stories: