நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் 9,958 தபால் வாக்குகள் பதிவானது

சேலம், ஏப்.25: சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 9,958 பேர், இதுவரை தங்களது தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர். தமிழக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,169 மையங்களில் 3,288 வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 77.57 சதவீதம் வாக்குப்பதிவானது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், முன்னாள் ராணுவத்தினர் என 11 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும், ராணுவ வீரர்கள் போன்ற வெளியூரில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் தபால் வாக்கு அனுப்பப்பட்டுள்ளது.  தவிர, சொந்த தொகுதியிலேயே தேர்தல் பணியில் ஈடுபட்ட 4,500 பேருக்கு, தேர்தல் பணி சான்றிதழ் (இடிசி) வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். தபால் வாக்குகளை பொறுத்தவரை, அவர்களுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்ட மையங்களிலேயே பெட்டிகள் அமைத்து, பெறப்பட்டது.

மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குமான உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலும் பெட்டிகள் வைக்கப்பட்டன. இதுதவிர, தபால் மூலம் தங்களது வாக்கினை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை 9,958 பேர் தங்களது தபால் வாக்கினை செலுத்தியுள்ளனர். இவர்களில் 9,368 பேர் நேரடியாக தபால் வாக்குக்கான பெட்டியிலும், 590 பேர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அனுப்பியுள்ளனர். இவற்றில், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் 4,974 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், சங்ககிரியை அடக்கிய நாமக்கல் தொகுதிக்கு 991 தபால் வாக்குகளும், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லியை அடங்கிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 2,518 தபால் வாக்குகளும், மேட்டூரை அடக்கிய தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு 1,475 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளது. தபால் வாக்கினை பெற்றவர்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வரை, தங்களது வாக்கினை அளிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: