அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

ராமநாதபுரம், ஏப்.24: தமிழகத்தில் 2005ம் ஆண்டு மெட்ரிகுலேஷன், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளுக்கு உட்படாத ஆயிரத்து 500 பள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு இல்லாத பள்ளிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் 2009ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏற்கெனவே அரசு உருவாக்கிய விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். எனவே, அடிப்படை வசதிகள் இல்லாத 2ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு 2011ல் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு. தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் கோரின.

எனவே, போதிய இடவசதி இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அரசு விதிப்படி குறைந்தபட்ச நிலப்பரப்பை உறுதி செய்ய, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை தமிழக அரசு பல முறை நீடித்துவிட்டது.

2015-16ம் கல்வி ஆண்டுடன் அப்பள்ளிகளுக்கான அங்கீகாரம் முடிவடைந்தது. அதன் பிறகு தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடையாது என அரசு செய்தி வெளியிட்டது. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, அதே கல்வி ஆண்டு மே.31 வரை மட்டும் தாற்காலிக அடிப்படையில் ஒரே ஒரு முறை என்ற ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என கல்வித்துறை தெரிவித்தது. ஆனால் அப்பள்ளிகள் தொடர்நது இயக்கப்பட்டு வருகிறது. எனவே வரும் கல்வி ஆண்டில் இயங்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: தற்போது தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எனவே மாவட்டத்தில் அங்கீகாரமற்ற பள்ளிகளின் விபரத்தை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். இப்பள்ளிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக் கூடாது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றனர்.

Related Stories: