முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் மின்வெட்டால் அலுவலக பணிகள் முடக்கம்

சாயல்குடி, ஏப். 24: முதுகுளத்தூர், சாயல்குடி, வாலிநோக்கம், சிக்கல் மற்றும் கடலாடி பகுதிகளில் முன் அறிவிப்பின்றி தொடரும் மின்வெட்டால் அலுவலக பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் தேவையான உதவிகளை பெறமுடியாமலும், இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் தாலுகா, யூனியன், சார்பதிவாளர், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், கருவூலம், வங்கிகள், மருத்துவனைகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை (சான்றுகள்) வழங்க அரசு அனைத்தையும் கணினிமயமாக ஆக்கியுள்ளது.

தற்போது முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஏற்பட்டு, தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் தேவையான சான்றுகளை பெறமுடியவில்லை. மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், பிரசவித்த தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளும் அவதிப்பட்டு வருகின்றனர். நகர் மற்றும் கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கொசுக்கடி மற்றும் புழுக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர். எனவே சீரான மின் விநியோகம் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: