கிண்ணிமங்கலத்திற்கு இயக்கப்பட்ட டவுன்பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

திருமங்கலம், ஏப். 24: மதுரை பெரியாரிலிருந்து கிண்ணிமங்கலம் கிராமத்திற்கு இயக்கப்பட்ட டவுன்பஸ் கடந்த 6 மாதமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கிண்ணிமங்கலம் ஊராட்சி. சுமார் 2 ஆயிரம் பேருக்கும் மேல் வசிக்கும் இந்த கிராமத்திற்கு மதுரை பெரியார் நிலையத்திலிருந்து தினசரி டவுன்பஸ் இயக்கப்பட்டது. அரசரடி, நாகமலை, பல்கலைகழகம், செக்காணூரணி வழியாக விடப்பட்ட இந்த டவுன்பஸ்ஸை நம்பி கிண்ணிமங்கலம், அடுத்துள்ள மாவிலிபட்டி உள்ளிட்ட கிராமமக்கள் பயன்அடைந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென கிண்ணிமங்கலத்திற்கு இயக்கப்பட்ட டவுன்பஸ் நிறுத்தப்பட்டது. இந்த பஸ் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கிண்ணிமங்கலம் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தங்களது கிராமத்திலிருந்து செக்காணூரணி சென்று மதுரைக்கு டவுன்பஸ் மாறுகின்றனர். இதற்காக ஷேர் ஆட்டோவை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து கிண்ணிமங்கலம் பொதுமக்கள் கூறுகையில், ‘செக்காணூரணி டிப்போ திறக்கப்பட்டவுன் சுற்றுவட்டார கிராம பகுதியில் கூடுதல் டவுன்பஸ்கள் இயக்கப்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட எங்கள் கிராமத்து பஸ்ஸை நிறுத்திவிட்டனர். இது வேதனையளிக்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்றனர்.

இதே போல் மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், திருநகர், தென்பழஞ்சி, மாவிலிபட்டி வழியாக திருமங்கலத்திற்கு டவுன்பஸ் இயக்கப்பட்டது. ஒரு நாளைக்கு மூன்று முறை இயக்கப்பட்ட இந்த டவுன் பஸ் தற்போது காலையில் மட்டுமே இயக்கப்படுகிறது. காலை 7 மணிக்கு திருமங்கலம் வரும்இந்த பஸ் மீண்டும் 7.15 திருமங்கலத்திலிருந்து கிளம்பி மதுரைக்கு செல்கிறது. அந்த நேரத்தில் இந்த பஸ்சில் பயணிகள் யாரும் ஏறாததால் வெறும் பஸ்சாகவே சென்றுவருகிறது. இந்த காரணத்தை காட்டி மற்ற இரண்டு டிரிப்புகளை போக்குவரத்துக் கழகத்தினர் நிறுத்திவிட்டன். எனவே காலையில் 8 மணிக்கு மேல் மாவிலிபட்டி வழியாக திருமங்கலத்திற்கு டவுன்பஸ் இயக்கினால் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்கின்றனா பொதுமக்கள். இதேபோல் நிறுத்தப்பட்ட மதியம் மற்றும் மாலை நேரத்தில் இந்த டவுன்பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: