வாக்கு மையத்திற்குள் நுழைந்து ஆவணத்தை எடுத்தவர்கள் மீது குற்றவழக்கு மதுரை வக்கீல் போலீசில் புகார்

மதுரை, ஏப். 24: மதுரையில் வாக்கு மையத்திற்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றவர்கள் மீது குற்றவழக்கு பதிய வேண்டும் என்று தல்லாகுளம் காவல்நிலையத்தில் நேற்று மதுரை வக்கீல் முத்துக்குமார் புகார் மனு அளித்தார். இம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘மதுரை மக்களவைத்தொகுதி தேர்தல் முடிந்து, மருத்துவக்கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் சம்பூரணம், வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார். வாக்குப்பெட்டி இருக்கும் இடம் வாக்குச் சாவடிக்கு சமமானதாகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படடி ஆவணங்களை எடுத்துச் சென்றது குற்றம். இதற்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், இவர் மீது தற்காலிக பணிநீக்கம் தவிர வேறு நடவடிக்கை இல்லை. எனவே இவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுத்து வழக்ககுப்பதிவு செய்ய வேண்டும்’’. இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்பேரில் காவல்நிலையத்தில் மனு ரசீது தரப்பட்டது.

Related Stories: