சிதம்பரம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஜெயங்கொண்டம், ஏப். 24: சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, சிதம்பரம் (தனி) ஆகிய 6 தொகுதிக்கு உட்பட்ட 1,710 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 18ம் தேதியன்று வாக்கப்பதிவு நடந்தது.இதையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்கள், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்புக்கான குறிப்பேடு பதிவுகளை பார்வையிட்டார்.

Related Stories: