பாதுகாப்பு அதிகரிப்பு கன்னியாகுமரி கடலில் சவ்காஸ் ஆபரேஷன்

கன்னியாகுமரி, ஏப்.24:  இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் துணை ஜனாதிபதி சென்னை வருகையையொட்டி கன்னியாகுமரி கடலில் சவ்காஸ் ஆபரேஷன் நடந்தது.பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடற்படையுடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபடும் சவ்காஸ் ஆபரேஷன் நடத்தப்படுகிறது.தற்போது துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு சென்னைக்கு வந்துள்ளார். அவர் இன்று (24ம் தேதி) திரும்புகிறார். அதுவரை கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் சவ்காஸ் ஆபரேஷன் நடத்தப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரை கிராமங்களிலும் சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ஜாண்கிங்ஸ்லி ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு சொந்தமான அதிநவீன படகில் ரோந்து மேற்கொண்டனர்.மேலும் சின்னமுட்டம், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம், தேங்கப்பட்டணம், குளச்சல், முட்டம் ஆகிய சோதனைசாவடிகளில் அதிக போலீசார் நியமிக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்படுகிறது. மேலும் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: