கடம்பூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம், ஏப். 23:  கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிகிழங்கு பாரம் ஏற்றி சென்ற லாரி நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்வதால் வியாபாரிகள் கிழங்கை விலைக்கு வாங்கி லாரிகள் மூலம் சேலம், தருமபுரி பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு ஆகிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.  இந்நிலையில், கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிகிழங்கு பாரம் ஏற்றிய லாரி நேற்று காலை கடம்பூர் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

மல்லியம்மன் கோயில் அருகே லாரியின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனதால் லாரி கிழக்குப்புறமாக சாய்ந்தது. அதில் இருந்த மரவள்ளிக்கிழங்கும் சரிந்தன. இதனால் கடம்பூர் - சத்தியமங்கலம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர்தப்பினார். விபத்து காரணமாக வாகனங்கள் மலைப்பாதையில் வரிசையாக அணிவகுத்து நின்றன.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு வாகனம் மூலம் சற்று நகர்த்தி சாலையில் சிறு வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து ஏற்படுத்தினர். அதிக பாரம் காரணமாக லாரி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: