செங்கல் தயாரிப்பதற்கு ஆற்று படுகையில் அனுமதியின்றி மண் எடுக்கும் தொழிலாளர்கள் தண்ணீர் வந்தால் கரைகள் உடையும் அபாயம்

கும்பகோணம், ஏப். 23: செங்கல் தயாரிப்பதற்கு ஆற்று படுகையில் மண்ணை தொழிலாளர்கள் எடுத்து வருகின்றனர். இதனால் ஆறுகளில் தண்ணீர் வந்தால் கரைகள் உடையும் அபாயம் உள்ளது.தஞ்சை மாவட்டத்தில் நெடார், அன்னப்பன்பேட்டை, வையச்சேரி, காவலூர், மெலட்டூர், திருக்கருகாவூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெட்டாற்றின் கரையோரங்களில் செங்கல் சூளை இயங்கி வருகிறது. செங்கல் தயாரிப்பவர்கள் மண் கிடைக்காததாலும், அரசு பல விதிமுறைகளை விதித்துள்ளதாலும் ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணை எடுத்து செங்கல் தயாரிக்கின்றனர். மண் எடுக்க வேண்டுமானால் விண்ணப்ப படிவம் கொடுத்து முறையாக பணம் செலுத்தி செங்கல் தயாரிப்பதற்கான ஆணையை பெற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் ம் என உத்தரவுள்ளது.

ஆனால் அனுமதியுடன் எடுக்கும் மண்ணால் போதியளவில் செங்கல் தயாரிக்க முடியவில்லை. தற்போது ஆற்றுப்படுகையில் செங்கல் தயாரிப்பவர்கள் முறையான அனுமதி பெற்றுள்ளார்களா என்பது கேள்வி குறியாக உள்ளது. ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணை எடுப்பதால் கரைகள் பலமில்லாமல் போய்விடும். இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் கரையை உடைத்து கொண்டு ஊருக்குள்ளும், சாகுபடி செய்துள்ள வயல்களுக்குள் புகுந்து விடும். ஆற்று படுகையில் செங்கல் தயாரிப்பதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. வருங்காலத்தில் ஏற்படும் ஆபத்தை உணராமல் வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி உள்ளிட்ட அனைத்து ஆற்றின் கரைகளிலும் படுகை மண்ணை எடுத்து செங்கல் தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறுகையில், ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணை எடுக்க கூடாது என்று உத்தரவுள்ளது. அதையும் மீறி ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணால் செங்கல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுத்துரைத்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்று மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. படுகையில் உள்ள மண்ணானது மேலே உள்ள இரண்டடி  உள்ள மண்ணில் தான் நுண்ணுயிர் இருக்கும். அதை எடுத்துவிட்டால் உயிர் இல்லாத இறந்த மண்ணாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊராட்சிகளில் வீடுகளை கட்ட வேண்டுமானால் சாம்பல் சிமென்டிலான கற்களை தான் பயன்படுத்தி தான் வீடு கட்ட வேண்டுமென உத்தரவிட்டு தான் வீடு கட்ட அனுமதி வழங்குகின்றனர். இதேபோல் தமிழகத்திலும் சாம்பல் சிமென்டால் தயாரிக்கப்பட்ட கற்களை பயன்படுத்தி தான் வீடு கட்ட வேண்டுமென உத்தரவிட வேண்டும். ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணை எடுத்து செங்கல் தயாரித்தால் வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் படுகை பகுதி பாதிக்கும். எனவே ஆற்றுப்படுகையில் செங்கல் தயாரிக்கும் பணியை நடப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: