குமரியில் ெதன்னை விவசாயிகள் வேதனைஉற்பத்தி குறைந்த போதும் விலை உயராத தேங்காய்

நாகர்கோவில், ஏப். 23: குமரிமாவட்டத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து படைத்தன. இவற்றிற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீர் ஆதாரமாக விளங்கி வந்தன. நெல் சாகுபடியில் உள்ள சிரமம், போதிய மழை இன்மை, வறட்சி, வெள்ளம் போன்றவற்றில் பாதிப்பு, நெல்லுக்கு போதிய விலை இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான வயல்வெளிகள் படிப்படியாக தென்னந்தோப்புகளாக மாறின. இதனால் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு கணிசமாக குறைந்து விட்டது. நெல் சாகுபடியில் பெருளாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு தென்னை ஓரளவு கை கொடுத்து வந்தது. இந்நிலையில் வறட்சி, நோய் தாக்குதல் போன்றவற்றால் தேங்காய் உற்பத்தியும் படிப்படியாக குறைந்து வருகிறது. கேரளா வாடல் நோய் தாக்கப்பட்ட தோட்டங்களில் 50 சதவீத மரங்களில் தேங்காய் உற்பத்தி அறவே நின்று போனது. இருக்கும் மரங்களுக்கு உரம் இட்டு, பாசன வசதி செய்தாலும் உற்பத்தி அதிகரிப்பதில்லை. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். சில தோட்டங்களில் தேங்காய் அறுவடை செய்யும் கூலிக்கு கூட தேங்காய் கிடைப்பதில்லை.

 எந்த ஒரு பொருளும் உற்பத்தி குறைந்தால் விலை அதிகரிக்கும். ஆனால் குமரிமாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி தற்போது கணிசமாக குறைந்துள்ள நிலையில் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ ரூ. 30 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய் தற்போது ரூ. 23க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தென்னை விவசாயிகள் வருவாய் இழந்து கண்ணீர் விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தென்னை மரங்களை வெட்டி விட்டு வேறு சாகுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே தென்னை விவசாயிகளை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: