சேலத்தில் கொட்டி தீர்த்த கனமழை

சேலம், ஏப்.22: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 3வது நாளாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. ஓமலூரில் அதிகபட்சமாக 66 மில்லி மீட்டருக்கு மழை பதிவானது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஆரம்பித்த கோடை மழை, தற்போது வடமாவட்டங்களிலும் பெய்ய தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு, மாநிலம் முழுவதும் கோடை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடந்து மழை பெய்து வருகிறது. சேலத்தில் பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு 12 மணிக்கு பின் பெய்த மழை, இடைவிடாது சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. மாநகர பகுதியில் கனமழையின் காரணமாக, சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மண் சாலைகள், சகதி காடாக மாறியது.

அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், நாராயணநகர், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி என மாநகர் முழுவதும், ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. சுட்டெரிக்கும் கோடையில் பெய்த இந்த மழையால், பூமி குளிர்ந்து இதமான சூழல் உருவாகியுள்ளது. இரவு நேரத்தில் வீடுகளுக்குள் தூங்க முடியாத அளவிற்கு வெப்பம் தகித்த நிலையில், மழையால் நேற்றிரவு குளிர் நிலவியது. ஏற்காட்டில் பெய்த மழையால், அதிகாலையில் கடும் குளிர் வீசியது. மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்றினர்., ஓமலூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அந்த பகுதிகளில் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த கோடை மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக ஓமலூரில் 66 மில்லி மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு: சேலம்12.2, ஓமலூர்66, மேட்டூர்64.8, இடைப்பாடி60.4, சங்ககிரி28, காடையாம்பட்டி28, ஆணைமடுவு26, ஏற்காடு13.8, பெத்தநாயக்கன்பாளையம்3, கரியகோயில்2, ஆத்தூர்1.1 என பதிவாகியிருந்தது.

Related Stories: